Thondaradipodiyazhwar
தொண்டரடிப் பொடியாழ்வார்

தொண்டரடிப் பொடியாழ்வார், பிரபவ ஆண்டு, மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில், சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடி என்ற ஊரில், வேத விசாரதர் என்பவருக்கு திருமாலின் திருமார்பில் பிரகாசிக்கும் வைஜயந்தி என்னும் மாலையின் அம்சமாகத் தோன்றினார். பெற்றோர்கள் விப்ரநாராயணர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

இவர் சிறுவயது முதலே திருவரங்கத்துப் பெருமாள் மீது பற்றுக் கொண்டு அவருக்கு மலர் கைங்கர்யம் செய்ய எண்ணினார். அரங்கநாதனும் அவர்முன் தோன்றி அவ்வாறே செய்ய கட்டளையிட்டார். ஆழ்வார் திருவரங்கம் சென்று நந்தவனம் அமைத்து தொண்டு செய்து வந்தார். அந்நாளில் திருவரங்கத்துக்கு அருகில் உள்ள உறையூரில் சோழ மன்னன் அரசாண்டு வந்தான். அவனுடைய அரசவைக்கு, பக்கத்து ஊரிலிருந்து வந்து ஆடிப்பாடி பரிசு பெற்றுச் செல்லும் இரு தாசிகள், ஒருநாள் விப்ரநாராயணரையும், அவருடைய நந்தவனத்தையும் பார்த்தனர். இருவருள் இளையவளான தேவதேவி என்பவள் விப்ரநாராயணரை தன்வசப்படுத்துவதாகச் சபதம் செய்து, தானும் அவருடன் நந்தவனத்தில் மலர் கைங்கர்யம் செய்ய உதவுவதாகக் கூறி. அவருடன் தங்க அனுமதி கோரினாள். அனுமதி அளித்த விப்ரநாராயணர் அவளிடம் காதல் வயப்பட்டு இறைபணியை மறந்து அவளுடைய வீட்டிற்கே சென்று விட்டார். அவரிடமிருந்த பொருள் குறைந்ததும், தேவதேவியின் தாயார் அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டாள். விப்ரநாராயணர் இறைப்பணியை மறந்து, பசி தாகம் இல்லாதவராய் அவளை நினைத்துக் கொண்டு ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார்.

அவரது நிலையைக் கண்ட அரங்கன் ஒரு நாடகம் நடத்த நினைத்து, கோயிலில் உள்ள ஒரு பொற்குவளையை எடுத்துச் சென்று தேவதேவியின் வீட்டில் கொடுத்து, தான் விப்ரநாராயணரின் ஏவலன் என்றும், இதை அவர் கொடுக்கும்படி சொன்னார் என்றும் கூறினார். இதனால் மகிழ்ந்த அவர்கள் விப்ரநாராயணரைத் தேடிவந்து உபசரித்தனர். மறுநாள் பூஜை பொருள் காணாமல் போனதை அறிந்த அதிகாரிகள் அரசனிடம் முறையிட, அவனும் காவலர்களை அனுப்பி தேடச் சொன்னான். அவர்கள் தேவதேவியின் வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்து விப்ரநாராயணரையும், தேவதேவியையும் கைது செய்து அரசவையில் நிறுத்தினர். விப்ரநாராயணரின் ஏவலன்தான் கொண்டு வந்து கொடுத்தான் என்று தேவதேவி சொல்ல, விப்ரநாராயணரோ தான் அதைக் கொடுத்து அனுப்பவில்லை என்று கூறினார். அரசன் இருவரையும் சிறையில் அடைத்தான். அன்றிரவு, அரங்கன் அரசனின் கனவில் தோன்றி தனது நாடகத்தைக் கூற, அரசன் இருவரையும் விடுவித்தான். விப்ரநாராயணர் மனம் திருந்தி மறுபடியும் இறைப்பணியைத் தொடர்ந்து செய்து "தொண்டரடிப்பொடி" என்று பெயர் பெற்றார்.

அரங்கனின் புகழை "திருமாலை" என்ற 45 பாசுரங்களாலும். "திருப்பள்ளியெழுச்சி" என்ற 10 பாசுரங்களாலும் பாடியுள்ளார். மார்கழி மாதங்களில், வைணவ ஆலயங்களில் திருப்பாவை பாடுவதற்குமுன் திருப்பல்லாண்டும், திருப்பள்ளியெழுச்சியும் பாடுவது வழக்கம்.

திருப்பள்ளியெழுச்சி திருமாலை

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.